

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் சுகாதாரத்துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கான கடன் உத்தரவாத திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம், சுகாதாரம் மற்றும் மருத்துவ உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி உத்தரவாதம் வழங்குவதாகும்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று ரூ.6.29 லட்சம் கோடி சலுகை தொகுப்புகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்த திட்டம் குறித்து கூறியதாவது:-
எதிர்காலத்தில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு மெட்ரோ அல்லாத நகரங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது.
கிராமப்புறப்பகுதிகளிலும், இரண்டாவது நிலை, மூன்றாவது நிலை நகரங்களிலும் மருத்துவ திறன்களை அதிகரிப்பது மிகமும் முக்கிமானதாக இருக்கிறது. சுகாதார உள் கட்டமைப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றமும், பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவப்போகிறது.
இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி சேவைகள் துறையின் மூலம் வாரந்தோறும் கண்காணிப்பேன். இதில் தாமதங்களை சமாளிக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை நாங்கள் உயிர்ப்பித்து வருகிறோம்.
நாங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையை விரும்பவில்லை. எவ்வாறாயினும் அதை விட்டு விட முடியாது. தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக எல்லா நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை நாட்டுக்கு வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.