சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியா இன்று மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரியாவிடம் நேற்று அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியா இன்று மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு
Published on

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நடிகை ரியா, அவரது சகோதரர் மற்றும் சிலருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

இந்தநிலையில் சமீபத்தில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த அப்பாஸ் லாகானி, கரன் அரோரா, சாயித் விலாத்ரா, அபதில் பாசித் பாரிகர் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது. அப்போது நடிகர் சுஷாந்த் சிங்கின் உதவியாளர் சாமுவேல் மிரண்டா (வயது 33) என்பவருக்கும் கைது செய்யப்பட்ட போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையின் போது சாமுவேல் மிரண்டா, ரியா சக்கரபோர்த்தியின் தம்பி சோவிக் (24) தான் போதைப்பொருள் கும்பலை தொடர்பு கொள்ள கூறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதை தொடாந்து நடந்த விசாரணையின் போது சாமுவேல் மிரண்டா நடிகர் சுஷாந்த் சிங் வீட்டில் இருந்தவர்களுக்கு தான் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுஷாந்த் சிங் வீட்டு வேலைக்காரர் திபேஷ் சாவந்தையும் கைது செய்தனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று காலை போலீசாருடன் சாந்தாகுருசில் உள்ள நடிகை ரியாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் ரியாவை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர். அதனை ஏற்று நேற்று மதியம் 12 மணியளவில் ரியா மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அதிகாரிகள் அவரிடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் முத்தா அசோக் ஜெயின் கூறுகையில், இந்த வழக்கில் புதிதாக அனுஜ் கேஷ்வாணி என்பவரை கைது செய்துள்ளோம். இவரையும் சேர்த்து 8 பேர் கைதாகி உள்ளனர். நடிகை ரியாவை திங்கட்கிழமையும் (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளோம் என்றார். ஆனால் ரியாவிடம் நேற்று நடந்த விசாரணை விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

முன்னதாக நடிகை ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் வந்த போது அங்கு அதிகளவில் பத்திரிகையாளர்கள் திரண்டு இருந்தனர். அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு மத்தியில் நடிகை ரியாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. ஆனால் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் போதைப்பொருள் பயன்படுத்தி வந்தார் என்று ரியா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com