

மும்பை,
34 -வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்டவர்கள் மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. டெல்லியில் இருந்து வந்து மும்பையில் முகாமிட்டு இருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் திருப்திகரமான பதிலை அளிக்காததால் அவரிடம் மீண்டும் விசாரிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அதன்படி நேற்று மதியம் 1.30 மணியளவில் நடிகை ரியா போலீஸ் பாதுகாப்புடன் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஒ. விருந்தினா மாளிகைக்கு வந்தார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 7 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ 3- ஆம் நாளாக சம்மன் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.