

சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 28-ந் தேதி மீலாது நபி பண்டிகை கொண்டாடுவதாக இருந்தது. இந்தநிலையில் முஸ்லிம்கள் வசித்து வரும் பகுதிகளில் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடியதால், மீலாது நபி கொண்டாட்டத்தை தள்ளி வைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் அறிவுரை வழங்கினார். இதையடுத்து முஸ்லிம்கள் அக்டோபர் 1-ந் தேதி (அதாவது நேற்று) மீலாது நபி பண்டிகையை கொண்டாடுவதாக முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை வழக்கம்போல சிவமொக்கா மாவட்டத்தில் மீலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது.
குறிப்பாக சிவமொக்கா ராகிகுட்டா, சாந்திநகர், அமீர் அகமது சர்க்கிள், காந்திநகர், தேவராஜ் அர்ஸ் சாலை ஆகிய இடங்களில் மீலாது நபி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பகுதிகள் பதற்றமானது என்பதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்தநிலையில் ராகிகுட்டாவில் முஸ்லிம்கள் வைத்திருந்த திப்புசுல்தான் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேனரில் சர்ச்சைக்குரிய வாசகத்தை எழுதியிருந்ததால் இந்துக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார், பேனரில் இருந்த வாசகத்தை அழிக்கும்படி முஸ்லிம் சமுதாயத்தினரிடம் கூறினார். இதை கேட்ட அவர்கள் அதை அழித்தனர்.
இருப்பினும் சில முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் ராகிகுட்டா பகுதியில் குவிந்து போராட்டம் நடத்த தொடங்கினர். அப்போது முஸ்லிம் வாலிபர் ஒருவர் ரத்தத்தால் திப்பு சுல்தான் பேனரில் சர்ச்சைக்குரிய வகையில் வாசம் எழுதினார். இதனால் அங்கு மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் தடுப்பு வேலி அமைத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். இதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தநிலயில் மாலையில் மீலாது நபி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் பாதுகாப்பிற்காக போலீசாரும் சென்றனர். அப்போது திடீரென்று மர்மநபர்கள் சிலர் போலீசார் மீதும் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கல் வீசினர். இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் சேதம் அடைந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் கலவரமாக மாறியது. இதை பார்த்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் யாரும் கேட்கவில்லை. தொடர்ந்து கல் வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர்.
இதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த கலவரத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக 10-க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ராகிகுட்டா பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருதால் அங்கு 144 தடை விதித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டார். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.