

புது டெல்லி,
வெங்காய கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 1,875-லிருந்து ரூ. 2,125 ஆக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெங்காய கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 1,875-லிருந்து ரூ. 2,125 ஆக, அதாவது 13 சதவிதம் அரசு உயர்த்தியுள்ளது. திருத்தப்பட்ட இந்த கொள்முதல் விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருத்தப்பட்ட இந்த கொள்முதல் விலையானது, கையிருப்பு கொள்முதல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு, வெங்காய விவசாயிகளுக்கு சிறந்த வருவாயையும் உறுதி செய்யும். வேளாண் துறையின் 2025-26-ம் ஆண்டுக்கான இரண்டாவது மதிப்பீடுகளின்படி, வெங்காய உற்பத்தி 307.37 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெங்காயத்தின் ஒட்டுமொத்த கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இருப்பினும், வழக்கமான விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலைகள் சிறிதளவு மட்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்போதைய கையிருப்பு போதுமானதாக உள்ளது. வெங்காயத்திற்கு எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.