

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹனகல் பகுதியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் விலைவாசி உயர்வுக்காக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
தேசிய அளவிலும், கர்நாடகத்திலும் ஒரே மாதிரியான நிலை நிலவுகிறது. சாமானிய மக்களின் நிலை மோசமாக உள்ளது. பொதுமக்களின் வருமானம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் செலவு அதிகரித்துவிட்டது. விவசாயிகளின் வருவாய் பாதியாக சரிந்துவிட்டது. பெட்ரோல் விலை ரூ.110-ஐ தொட்டுவிட்டது. டீசல் விலையும் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.925 ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆட்சியில் சிமெண்டு, கட்டுமான பொருட்கள், மணல், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், உரம், யூரியா போன்ற அனைத்து வகையான பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வுக்காக பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டுமா? இதற்கு பா.ஜனதா தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.