

புதுடெல்லி,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,860 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு 4-வது இடமும், 1,417 வாக்குகள் பெற்ற பாரதீய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 5-வது இடமும் கிடைத்தது. பாரதீய ஜனதா வேட்பாளரை விட நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) அதிக வாக்குகள் கிடைத்து இருந்தது. அதாவது நோட்டாவுக்கு 2,373 ஓட்டுகள் கிடைத்து இருந்தன.
டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மருது கணேஷ் (தி.மு.க.), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாரதீய ஜனதா) உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
ஆர்.கே.நகரில் பாரதீய ஜனதா வாங்கிய வாக்கை கேலி செய்து உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, உலகின் மிகப்பெரிய மிஸ்டுகால் கட்சியான பாரதீய ஜனதா, தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மிஸ்டுகால்களை பெற்றது, ஆனால் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் 1417-ஐ பெற்று உள்ளது. தமிழகத்தின் சிறப்பான ஊத்தாப்பத்தை பாரதீய ஜனதாவினர் ஜீரணித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்,என குறிப்பிட்டு உள்ளார். அவருடைய டுவிட்டருக்கு பலரும் பதில் டுவிட் செய்து வருகிறார்கள்.