ராணுவ பணிகளை மேற்கொள்ளும் ரோபோ: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு


ராணுவ பணிகளை மேற்கொள்ளும் ரோபோ: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு
x

Image Courtesy : @DRDO_India

நேரடி மனித கட்டளையின் கீழ் சிக்கலான பணிகளை செய்யக்கூடிய ரோபோவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், அதிக ஆபத்துள்ள சூழல்களில் ராணுவ வீரர்கள் பணியாற்ற வேண்டிய தேவையை குறைக்கும் நோக்கில், நேரடி மனித கட்டளையின் கீழ் சிக்கலான பணிகளை செய்யக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பான பணிகள் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக, மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் குழு இயக்குனர் தலோல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ரோபோவின் மேல் மற்றும் கீழ் உடலுக்கு தனித்தனி முன்மாதிரிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சில சோதனை செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்த ரோபோ சமீபத்தில் புனேவில் நடைபெற்ற ரோபோட்டிக்ஸ் தேசிய பட்டறையில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ரோபோ மேம்பட்ட வளர்ச்சி கட்டத்தில் உள்ளதாகவும், ஆபரேட்டர் கட்டளைகளை புரிந்துகொண்டு செயல்படுத்தும் வகையில் ரோபோவின் திறனை மேம்படுத்துவதில் விஞ்ஞானிகள் குழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ 3 முக்கிய அமைப்புகளை சார்ந்துள்ளது. அவை, மனித தசைகளைப் போன்ற இயக்கத்தை உருவாக்கும் இயக்கிகள், சுற்றுப்புறத்தில் இருந்து நிகழ்நேர தரவுகளை சேகரிக்கும் சென்சார்கள் மற்றும் தகவல்களை பெற்று வழிநடத்தும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவை ஆகும். இந்த திட்டத்தை 2027-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யும் நோக்கில் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story