

ஸ்ரீநகர்
ரோஹிங்கியா மக்கள் விவகாரத்தில் தலாய் லாமாவும், தமிழ் அகதிகளையும் திரும்பிப் போகச் சொல்வார்களா என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கேட்டுள்ளார்.
இந்தியாவை காப்பாற்றுவதாக கூறிக்கொள்ளும் நபர்கள் நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை இந்தியாவை விட்டு வெளியேற கோருவார்களா என்றும், ராஜீவ் கொலைக்கு தண்டனை கொடுப்பது போல தமிழ் அகதிகளை ஸ்ரீலங்காவிற்கு திரும்ப அனுப்புவார்களா என்றும் கேட்டார்.
ரோஹிங்கியாக்களுக்கு எதிரான இனவெறி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதால் தலாய் லாமா இந்தியாவில் தங்குவதை யாரும் விரும்பாவிட்டாலும் அவர் இங்கிருக்கலாம் என்று தனது ட்விட்டரில் அவர் எழுதியுள்ளார்.
2014 ஆம் ஆண்டிற்கு முன்பு தனது ஆட்சியின்போது ரோஹிங்கியா மக்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பது போன்ற உளவுத்துறை குறிப்புகள் ஏதும் ஒருங்கிணைந்த தலைமையகத்திற்கு வரவில்லை; அது குறித்து விவாதிக்கப்படவும் இல்லை என்றார் உமர் அப்துல்லா.
மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் ரோஹிங்கியா மக்கள் தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியதை அடுத்து உமர் அப்துல்லாவின் கருத்து வெளிவந்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் விமர்சித்துள்ளார். கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடிய பகுதிக்கு மீண்டும் அவர்களை திருப்பி அனுப்புவதை இந்தியா மேற்கொள்ள முடியாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இவ்வாறு எதிர்ப்புகள் இருந்தாலும் சட்ட விரோத குடியேற்றத்தை செய்துள்ள ரோஹிங்கியாக்களால் உருவாகக்கூடிய பாதுகாப்பு ஆபத்துக்களை சட்ட ரீதியான முறைகளால் களைவதை சகிப்புத்தன்மையற்றதாக கருத முடியாது என்று அரசு கூறியுள்ளது. தேசத்தின் நலன் கருதியே ரோஹிங்கியாக்களை வெளியேற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் உள்துறை இணை அமைச்சர் கிர்ரேன் ரிஜ்ஜூ.