

புதுடெல்லி,
மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.
மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது.
இந்நிலையில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 3 லட்சம் பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எங்கள் மத்தியில் எந்தஒரு பயங்கரவாத செயல்பாடும் கிடையாது என ரோஹிங்யா அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக திங்கள் கிழமை அபிடவிட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இப்போது அபிடவிட் தாக்கல் செய்து உள்ள மத்திய அரசு, ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவாகும், சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என கூறிஉள்ளது.
ரோஹிங்யா அகதிகளுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உள்ளது. அவர்களை தொடர்ச்சியாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிப்பது என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. அதிகமான ரோஹிங்யாக்கள் போலியான ஆவணங்களை கொண்டு பான் கார்டையும் வாங்குகிறார்கள். ரோஹிங்யா அகதிகளை தொடர்ச்சியாக இங்கு தங்க அனுமதித்தால் இந்தியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது சமூக அமைதியின்மைக்கும் வழிவகை செய்யும் எனவும் குறிப்பிட்டு உள்ளது மத்திய அரசு.
அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு எந்தஒரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை, ரோஹிங்யாக்களை தொடர்ந்து இந்தியாவில் வைத்திருக்க வேண்டும் என எந்த பொறுப்பும் கிடையாது. இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அபிடவிட்டை தாக்கல் செய்து உள்ளது. டெல்லி, ஐதராபாத், மேவார் மற்றும் ஜம்முவில் அகதிகள் மத்தியில் பயங்கரவாத தொடர்புடையவர்களும் உள்ளனர், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான உளவுத்துறை தகவல்களை கோர்ட்டில் அக்டோபர் மூன்றாம் தேதி சமர்பிப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டு உள்ளது. வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.