ரோகிணி சிந்தூரியின் ரகசிய படங்களை முகநூலில் வெளியிட்ட ஐ.ஜி. ரூபா

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களை முகநூலில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த படங்களை ரோகிணி சிந்தூரி ஆண் அதிகாரிகளுக்கு அனுப்பியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
ரோகிணி சிந்தூரியின் ரகசிய படங்களை முகநூலில் வெளியிட்ட ஐ.ஜி. ரூபா
Published on

பெங்களூரு:-

முகநூல் புகைப்படங்களால் சர்ச்சை

கர்நாடகத்தில் அறநிலையத்துறை கமிஷனராக இருந்து வருபவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி. இவருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியான ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே திடீரென்று மோதல் உருவாகி உள்ளது. ரோகிணி சிந்தூரி மீது முகநூலில் 19 குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் ரூபா, அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களை ரூபா நேற்று வெளியிட்டு இருந்தார். அதாவது ரோகிணி சிந்தூரி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வது உள்ளிட்ட ரகசிய புகைப்படங்களை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வெளியிட்டு இருந்தார். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகைப்படங்களை, அவருக்கு தெரியாமல் முகநூலில் வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரூபாவுக்கு எதிர்ப்பு

முகநூலில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சொந்த படங்களை வெளியிட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முகநூலில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த முகநூல் பதிவுகளில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு கூறுவது ஏற்றுக் கொள்ள கூடியது தான், அவரது ரகசிய புகைப்படங்களை முகநூலில் வெளியிடுவது சரியானது இல்லை, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இதுபோன்று செயல்பட அனுமதி உள்ளதா? என்று கேள்வி கேட்டு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு...

ரோகிணி சிந்தூரி சம்பந்தப்பட்ட ரகசிய புகைப்படங்கள் என்னிடம் ஏற்கனவே இருந்தது. அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நான் எடுக்கவில்லை. அந்த ரகசிய படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ரோகிணி சிந்தூரியே அனுப்பி வைத்திருந்தார். அவை அந்த அதிகாரிகளிடம் இருந்து கிடைத்தது தான். தன்னுடைய ரகசிய படங்களை ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் உள்ளதா?. அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரகசிய புகைப்படங்களை எடுத்து நான் வெளியிடவில்லை.

படுக்கை மீது படுத்திருந்தபடி எடுத்த ரகசிய புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடவில்லை. அந்த படம் எனக்கு கிடைத்தது. தனிப்பட்ட முறையில் ரோகிணி சிந்தூரியுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக என்னுடன் அவர் பேசியதில்லை. புகைப்படங்களை வெளியிட்ட விவகாரத்தில் எதுவும் சொந்த விவகாரங்கள் ஆகி விட்டது. ஏனெனில் ஒரு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். கண்ணாடி மாளிகையில் இருந்து பணியாற்றினாலும், ஒரு

அதிகாரி என்பதால் பொது பிரச்சினையாகவே பார்க்கப்படும்.

ஆதாரம் உள்ளது

இந்த விவகாரம் குறித்து அரசு உத்தரவிட்டால், என்னிடம் இருக்கும் புகைப்படங்களை வழங்குவேன். மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த போது கொரோனாவால் மக்கள் உயிரிழந்த போதிலும், நீச்சல் குளம் கட்டி இருந்தார். மாவட்ட கலெக்டருக்கான வீட்டை காலி செய்த போதும் கூட, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றிருந்தார். அதற்கான ஆதாரமும், அவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மற்றொரு பெண் மீது ஏன் இப்படி குற்றச்சாட்டுகளையும், புகைப்படங்களையும் வெளியிடுகிறார் என்ற கேள்வி வரலாம். அவரே தன்னுடைய சொந்த படங்களை ஆண் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் போது, அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் நான் வெளியிடும் போது ஏன் இந்த அனுதாபம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com