மராட்டிய கூட்டுறவுத்துறையில் பணமோசடி - அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ரோகித் பவார் விடுதலை

பணமோசடி வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி மனு ரோகித் பவார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மராட்டிய கூட்டுறவுத்துறையில் பணமோசடி - அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ரோகித் பவார் விடுதலை
Published on

மும்பை,

மராட்டிய மாநில கூட்டுறவுத் துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறைகளில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த முறைகேடுகள் காரணமாக, ஜனவரி 2007 முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் மாநில அரசுக்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு குற்றம் சாட்டியிருந்தது.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக மும்பை பாராமதி பகுதியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மருமகன் வழிப் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் பொருளாதாரக் குற்றப் பிரிவின் (EOW) இறுதி அறிக்கையை சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக பெயரிடப்பட்ட ரோகித் பவார் மற்றும் பிறர், பணமோசடி வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தனர்.

அதே சமயம், இறுதி அறிக்கையை கீழ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், 2021-ல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஒன்று மும்பை ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது என்று கூறி, ரோகித் பவார் உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு எதிராக அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி மகேஷ் ஜாதவ், குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் மனுக்களை ஏற்றுக்கொண்டு, சரத்பவார் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com