ரோஜ்கார் மேளா: 51 ஆயிரம் அரசு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

நாட்டின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு அரசு பணிக்கான நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
ரோஜ்கார் மேளா: 51 ஆயிரம் அரசு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மத்திய அரசு துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டம் பிரதமர் மோடியால் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காலை வழங்குகிறார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, நாட்டின் ரோஜ்கார் மேளா திட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே வேலைவாய்ப்புகளை வழங்கி உரையாற்றுகிறார். நாடு முழுவதும் 46 இடங்களில் இந்த ரோஜ்கார் மோளா நிகழ்ச்சி நடத்தப்படும்.

இதன்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அரசின் அஞ்சல் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை, அணு ஆற்றல் துறை, வருவாய், உயர் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

இதன்பின்னர், டெல்லி பாரத் மண்டபத்தில் ஜி-20 பல்கலை கழகத்தின் கனெக்ட் பினாலே நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் உரையாற்ற உள்ளார். ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நாடு முழுவதும் பணி நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com