

ஜெய்பூர்,
பாரதீய ஜனதா கட்சியில் மத்திய மந்திரிகளாக இருப்பவர்கள் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் கிரெண் ரிஜிஜு. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் இவர்கள் கட்டுக்கோப்பு வாய்ந்த உடலை வைத்திருப்பது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதன்பின் அவர்கள் பிட்னெசாக உடலை வைத்திருப்பது பற்றி சவால் ஒன்றையும் விடுத்தனர். டெல்லி பாரதீய ஜனதா தலைவர் மனோஜ் திவாரியும் இதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த சவாலை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் ஏற்று கொண்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் ஜெய்பூர் நகரில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, சிலர் புஷ் அப் செய்து கொண்டிருக்கின்றனர். சிலர் உடலை பிட்டாக வைத்திருப்பது பற்றி (வேறு வழிகளில்) காண்பித்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது என கூறினார்.
பிட்னெஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்கு பதிலாக பாரதீய ஜனதா எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 24ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்த சுமையை மாநிலத்திற்கு சொந்தமுடைய எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோர் மீது திணிக்க முடிவு செய்து விட்டன.
இதுபற்றி பேசிய அவர், மாநில அரசுகள் எரிபொருள் மீது வாட் மற்றும் செஸ் வரிகளை குறைத்து நிவாரணம் வழங்கலாம். எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் வருகிற தேர்தல்களில் அரசுக்கு சரியான பதிலடியை தருவார்கள் என்றும் கூறியுள்ளார்.