பெங்களூரு திரையரங்கில் மேற்கூரை இடிந்து விபத்து: தம்பதி உள்பட 3 பேர் காயம்

இந்த எதிர்பாராத விபத்தில், படம் பார்த்துக் கொண்டிருந்த தம்பதியினர் உள்பட 3 பேருக்குத் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
பெங்களூரு திரையரங்கில் மேற்கூரை இடிந்து விபத்து: தம்பதி உள்பட 3 பேர் காயம்.
மழையில் சேதமடைந்த திரையரங்கின் மேற்கூரை
Published on: 

பெங்களூரு,

பெங்களூரு பீண்யா தாசரஹள்ளி பகுதியில் உள்ள பிரபலத் திரையரங்கில், திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

மேற்கூரை இடிந்து விபத்து

பெங்களூரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மதியம் பீண்யா தாசரஹள்ளி பகுதியில் உள்ள பாரதி திரையரங்கில் கன்னடத் திரைப்படம் 'பிரேமதா ஊரலி' மதியக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

மழையின் தாக்கம் காரணமாகத் திரையரங்கின் உள்பகுதியின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் தாள்கள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேலைப்பாடுகள் திடீரென பார்வையாளர்கள் மீது இடிந்து விழுந்தன.

உயிர் தப்பிய குழந்தை

இந்த எதிர்பாராத விபத்தில், படம் பார்த்துக் கொண்டிருந்த தம்பதியினர் உள்பட 3 பேருக்குத் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்களுடன் இருந்த சிறிய குழந்தை எந்தவித காயமுமின்றி உயிர் தப்பியது. விபத்து நடந்தவுடன் திரையரங்கில் இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

உடனடியாக காட்சி நிறுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர முதலுதவி அளிக்கப்பட்டு, வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டணம் திரும்ப ஒப்படைப்பு

விபத்தைத் தொடர்ந்து திரையரங்கு நிர்வாகம், படம் பார்க்க வந்திருந்த மற்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவுக் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்கியது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தியேட்டர் நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com