ரோட்டோமேக் நிறுவனர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

ரோட்டோமேக் நிறுவனர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகனிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. #Rotomac
ரோட்டோமேக் நிறுவனர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Published on

புதுடெல்லி,

ரோட்டாமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி. இவர் 7 பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.2,919 கோடி கடன்கள் வாங்கினார். அந்த கடன்கள் இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.3,695 கோடியாக உயர்ந்து உள்ளது. ஆனால் விக்ரம் கோத்தாரி இந்த தொகையை வேண்டும் என்றே செலுத்தவில்லை.மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கடன்கள் வாராக்கடன்கள் ஆகி உள்ளன.

இது தொடர்பான புகாரின் பேரில், விக்ரம் கோத்தாரி மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து உள்ளன. சி.பி.ஐ. பதிவு செய்து உள்ள முதல் தகவல் அறிக்கையின்படி பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய 7 வங்கிகளுக்கு விக்ரம் கோத்தாரி வட்டியுடன் ரூ.3,695 கோடி திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.

வங்கிகளை மோசடி செய்வதற்கு விக்ரம் கோத்தாரி சட்டத்துக்கு புறம்பான வழிகளை நாடி இருப்பது சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., விக்ரம் கோத்தாரியை கைது செய்து உள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து நேற்று இரவு விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்தனர். இன்று, அவர்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, தான் எந்த தவறையும் செய்யவில்லை என்று விக்ரம் கோதாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆமாம், நான் வங்கியில் இருந்து கடன் பெற்றேன். ஆனால், நான் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பது தவறான தகவல் என்று கூறியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com