

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக கொண்ட ரோட்டோமேக் பேனா நிறுவனம், பேங்க் ஆப் பரோடா வங்கியில் பெற்ற ரூ.2 ஆயிரத்து 919 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த கடன்தொகை, வட்டியுடன் சேர்த்து ரூ.3 ஆயிரத்து 695 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக, வங்கி அளித்த புகாரின்பேரில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், ரோட்டோமேக் நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, அவருடைய மனைவி சாதனா கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ரோட்டோமேக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களுக்கு சொந்தமான ரூ.177 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. இந்த சொத்துகள், கான்பூர், மும்பை, உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன், குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.