ரெயில்களில் பெண்களிடம் ஈவ் டீசிங்; 3 வருட சிறை தண்டனை விதிக்கும் சட்ட பிரிவுக்கு ஆர்.பி.எப். கோரிக்கை

ரெயில்களில் ஈவ் டீசிங் செய்பவர்களுக்கு எதிராக 3 வருட சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட பிரிவை சேர்க்க ஆர்.பி.எப். கோரிக்கை வைத்துள்ளது.
ரெயில்களில் பெண்களிடம் ஈவ் டீசிங்; 3 வருட சிறை தண்டனை விதிக்கும் சட்ட பிரிவுக்கு ஆர்.பி.எப். கோரிக்கை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றிற்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக ரெயில்களில் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வருடங்களில், பெண் பயணிகளுக்கு எதிராக ரெயில்களில் நடந்த குற்றங்கள் தொடர்புடைய 1,607 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 2014ம் ஆண்டில் 448 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 553 வழக்குகளும், 2016ம் ஆண்டில் 606 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக ரெயில்களில் ஈவ் டீசிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கும் வகையில் ரெயில்வே சட்டத்தில் புதிய பிரிவுகளை சேர்க்கும்படி ரெயில்வே போலீஸ் படை (ஆர்.பி.எப்.) கோரியுள்ளது.

இதுபற்றி அந்த படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, ஒவ்வொரு முறை ரெயிலில் பெண் ஒருவர் துன்புறுத்தப்படும்பொழுது அல்லது பெண்கள் பெட்டிகளில் ஆண்கள் பயணிப்பது கண்டறியப்படும்பொழுது அரசு ரெயில்வே போலீசாரின் உதவியின்றி நாங்கள் அவர்களை பிடிக்க முடியாது. இந்த பிரிவுகளை சேர்த்து விட்டால் உடனடியாக செயல்பட முடியும். அரசு ரெயில்வே போலீசாரின் உதவியும் தேவைப்படாது என கூறியுள்ளார்.

இந்த புதிய பிரிவுகள் ரெயில்வே சட்டத்தில் சேர்க்கப்பட்டால், ரெயில்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு வருடம் என்ற அதிகப்பட்ச சிறை தண்டனையில் இருந்து 3 வருட சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com