

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில், வருடாந்திர மண்டல யாத்திரை காலத்திற்காக நவம்பர் 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அங்கு மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந்தேதி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் கோவில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு யாத்திரைக் காலத்திற்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இதையடுத்து மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறும். பக்தர்கள் ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனம் செய்யலாம். கோவில் நடை ஜனவரி 20-ந்தேதி அன்று மூடப்படும்.
தற்போது மண்டல பூஜை சீசன் நடைபெற்று வரும் நிலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசும், தேவசம் போர்டும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்த நிலையில் சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளில் உள்ளாட்சி துறை அதிகாரிகள், வருவாய், சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மொத்தம் 29 விதிமீறல் வழக்குகளில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கும் கடைகள் குறித்த புகார்கள் குறித்து அதிகாரிகள் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருவதுடன், குறைவான அளவுகளிலும் எடைகளிலும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.