

திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.100 கோடியில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. பக்தர்கள் தங்கிச்செல்லும் வகையில் பல்வேறு இடங்களில் நவீன தங்குமிட வளாகங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான நடவடிக்கையை கேரள மாநில அரசு தொடங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த கன மழை, நிலச்சரிவால் கோவில் பகுதிகள் சேதம் அடைந்தன. பயணிகளுக்கு வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. அத்துடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
அதற்கு எதிராக இந்து மத அமைப்புகள் பலவும் போராட்டத்தில் குதித்தன. இந்தப் பிரச்சினைகளால் சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் வரத்து குறைந்தது. இந்தநிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக ரூ.100 கோடியில் வசதிகள் செய்து தர கேரள மாநில அரசு முடிவு செய்தது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் மட்டுமல்ல, சபரிமலைக்கு செல்கிற பக்தர்கள் கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே அங்கெல்லாம் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதல் கட்டமாக ரூ.10 கோடியில் பல்வேறு வசதிகளுடன் நவீன தங்குமிடம் (அம்னிட்டி சென்டர்கள்) அமைக்கும் திட்டப்பணிகளை திருவனந்தபுரம் அருகேயுள்ள கழகுட்டம் மகாதேவர் கோவிலில் மாநில கூட்டுறவு, சுற்றுலா, தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தொடங்கி வைத்தார்.
அய்யப்ப பக்தர்கள் இங்கு வந்து ஓய்வு எடுத்து செல்கிற வகையில், 2 மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய தங்குமிட வளாகமாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் பரப்பளவு 26 ஆயிரத்து 846 சதுர அடிகள்.
இந்த கழகுட்டம், மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனின் தொகுதிக்கு உட்பட்டது. கழகுட்டம் மகாதேவர், கேரளாவில் உள்ள 108 சிவ தலங்களில் முக்கியமானது ஆகும்.
இந்த தங்குமிட வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஒரே நேரத்தில் 350 பேர் அமர்ந்து சாப்பிடத்தக்க வகையில் அன்னதான மண்டபம் இருக்கும். 700 பேர் அமரத்தக்க வகையில் ஒரு கலையரங்கமும், திறந்தவெளி மேடையும் அமைக்கப்படும். அத்துடன் அய்யப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக பிரமாண்ட மண்டபம் ஒன்றும் கட்டப்படுகிறது. நவீன சமையல் கூடம், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இங்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்ட்டர் அமைக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்ப சீசன் இல்லாத நேரத்தில் இந்த வளாகம், கல்யாண மண்டபமாக பயன்படுத்தப்படும்.
இதேபோன்று முக்கிய இடங்களில் தங்குமிட வளாகங்கள் அமைக்கப்படுகிறபோது, அது அய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக அமையும்.