ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: பேரணியை தள்ளி வைக்குமாறு ராகுல் காந்திக்கு வர்த்தக அமைப்பு கோரிக்கை

டெல்லியில் நடைபெற்ற பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக வணிகர்களுக்கு ஏற்கனவே சுமார் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.டி.ஐ. தெரிவித்துள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: பேரணியை தள்ளி வைக்குமாறு ராகுல் காந்திக்கு வர்த்தக அமைப்பு கோரிக்கை
Published on: 

புதுடெல்லி:

டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வணிகர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனை பாதிக்கப்படுவதால் ரூ.10,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

நவம்பர் 1-ம் தேதி பேரணி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறியும் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேரணியை நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பான சி.டி.ஐ. ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி விற்பனை பாதிக்கும்

இதுதொடர்பாக சி.டி.ஐ. தலைவர் பிரிஜேஷ் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் வணிக நடவடிக்கைகள் தீவிரமடையும் நிலையில், பேரணியால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு விற்பனை குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளார். பண்டிகையின்போது தங்கம், வெள்ளி, மின்னணு பொருட்கள், ஆடைகள், பாத்திரங்கள், இனிப்புகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் ரூ.25,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று வணிகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரூ.3,000 கோடி இழப்பு

டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக வணிகர்களுக்கு ஏற்கனவே சுமார் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.டி.ஐ. தெரிவித்துள்ளது.ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவுக்குள் சாந்தினி சவுக், சதர் பஜார், சாவ்ரி பஜார், கரோல் பாக் உள்ளிட்ட சுமார் 20 முக்கிய மொத்த மற்றும் சில்லறை விற்பனைச் சந்தைகள் அமைந்துள்ளன.பேரணியின்போது போக்குவரத்து மாற்றங்கள், சாலைத் தடுப்புகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இந்தச் சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.மேலும், பழைய டெல்லி மற்றும் புதுடெல்லி ரெயில் நிலையங்களுக்கு அருகில் பேரணி நடைபெறுவதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள வணிகர்கள் அமைப்பு, பண்டிகைக் காலம் முடியும் வரை முக்கிய வணிகப் பகுதிகளில் பெரிய அளவிலான பேரணிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு பேரணியை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com