குடிநீரை வீணடித்தால் ரூ.10,000 அபராதம்: புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடிநீரை வீணடித்தால் ரூ.10,000 அபராதம்: புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!
குடிநீர்
Published on: 

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் குடிநீரை வீணாக்கினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என புனே மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

புனே மாநகராட்சியின் அதிரடி உத்தரவு

மராட்டிய மாநிலம் புனேவில் கோடைகால நீர் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, குடிநீரை வீணாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புனே மாநகராட்சி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமலுக்கு வரும் இடம்- காலம்

இந்த உத்தரவு புனே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. குடியிருப்பு வளாகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டுமான இடங்கள் என அனைத்தும் இந்த புதிய கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, அணைகளில் நீர்மட்டம் குறையும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய கோடை மாதங்களில் இந்த நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராத விவரங்கள்

வீடுகளில் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிவதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வீணடித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களை முழுமையாக கழுவுதல், நீச்சல் குளங்களை நிரப்புதல், தனியார் தோட்டங்களுக்கு பாய்ச்சுதல் மற்றும் வணிக ரீதியான கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.10,000 வரை கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

3-வது முறை சிறை தண்டனை

மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் முறை விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், 3-வது முறையாகவும் தொடர்ந்து தண்ணீரை வீணடித்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே மாநகராட்சி எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X