

திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை - வெள்ளம் மற்றும் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் எழுந்த போராட்டங்கள் போன்ற காரணங்களால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சமீபத்திய மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்திருந்தது. இதனால் ரூ.100 கோடிக்கும் மேல் வருமானம் சரிவடைந்தது.
இதைத்தொடர்ந்து சபரிமலையை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மாநில அரசிடம் இருந்து நிதியுதவி கோரியது. இதை ஏற்று மாநில அரசும் தேவசம்போர்டுக்கு ரூ.100 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இதைத்தவிர சபரிமலையில் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள ரூ.102.16 கோடி, அருகில் உள்ள பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடி என ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.