இன்னும் இவ்வளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா..? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 97.87 சதவீத நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், ஆனால், 7,581 கோடி ரூபாய் இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) தெரிவித்துள்ளது.

இதன்படி மே 19, 2023 அன்று, வணிகம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் 28, 2024 அன்று வணிகம் முடிவடையும் போது ரூ.7,581 கோடியாக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும், 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான வசதி இருந்தது. இப்போது, ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி உள்ளது.

அக்டோபர் 9, 2023 முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வசதி உள்ளது. தபால் அலுவலகம் மூலமாகவும் பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, அதற்கு நிகரான தொகையை தங்கள் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com