

டெல்லி,
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் அனில் அம்பானியும் ஒருவர். இவரது மகன் ஜெய் அன்மோல். இவர் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
இதனிடையே, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இந்திய யூனியன் வங்கி உள்பட 18 வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 5 ஆயிரத்து 572 கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த கடன் அனைத்தையும் திருப்பி செலுத்திவிட்டதாக ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் கூறியது.
ஆனால், தங்களிடம் வாங்கிய ரூ. 450 கோடி கடனில் ரூ. 228 கோடியை ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என்றும் இதில் மோசடி நடந்துள்ளதாகவும் இந்திய யூனியன் வங்கி சிபிஐ-யிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த மோசடி புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ரூ. 228 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோல் உள்பட பலர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. மேலும், இந்த வழக்கில் ஜெய் அன்மோல் வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில், ரூ. 228 கோடி வங்கி மோசடி விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெய் அன்மோலுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை தொடர்ந்து ஜெய் அன்மோல் நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று 2வது நாளாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜெய் அன்மோலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.