சென்னைக்கு நகை வாங்க வந்த ரெயில் பயணியிடம் இருந்து ரூ.26.5 லட்சம் பணம் பறிமுதல்; ரெயில்வே போலீசார் நடவடிக்கை

சொலாசா சாய் காசி விஸ்வநாத் என்ற பயணியின் பையில் இருந்து ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது.
சென்னைக்கு நகை வாங்க வந்த ரெயில் பயணியிடம் இருந்து ரூ.26.5 லட்சம் பணம் பறிமுதல்; ரெயில்வே போலீசார் நடவடிக்கை
Published on

ஓங்கோல்,

நாட்டில் வரவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு ரெயிலில் பயணிகளிடம் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி, ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயிலில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஓங்கோல் ரெயில் நிலையத்தில் ரெயில் நடைமேடையில் பயணிகளின் உடைமைகளை போலீசார் குழு சோதனை செய்துள்ளது.

ரெயில்வே எஸ்.பி. சவுடேஷ்வரி உத்தரவின்பேரில், நெல்லூர் துணை மண்டல டி.எஸ்.பி. அப்துல் அஜீஜ் மேற்பார்வையின் கீழ், போலீசார் அடங்கிய குழுவினர் இந்த சோதனையை நடத்தினர்.

இந்த சோதனையின்போது 2 பயணிகளிடம் இருந்து மொத்தம் ரூ.30.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் சொலாசா சாய் காசி விஸ்வநாத் என்ற பயணியின் பையில் இருந்து ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது.

அதற்குரிய தொடர்புடைய ஆவணங்களை அவர் சமர்ப்பிக்க தவறி விட்டார். இதனால் போலீசார் அந்த தொகையை பறிமுதல் செய்தனர். நரசராவ்பேட்டை பகுதியில் தங்க நகை கடை ஒன்றில் கிளார்க்காக அவர் பணியாற்றி வருகிறார்.

சென்னையில் தங்கம் வாங்குவதற்காக அந்த தொகையை கொண்டு வந்திருக்கிறார். இதேபோன்று, ஷேக் ஜாபர் என்ற பயணியிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

ஜாபர், சிராலா பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30.5 லட்சம் பணம் முழுவதும் பின்னர் வருமான வரி துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com