வாசனை திரவிய பாட்டில்களில் திரவ வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்

நூதன கடத்தல் முறை பிடிபடுவது இதுவே முதல் முறை என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசனை திரவிய பாட்டில்
Published on: 

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் வாசனை திரவிய பாட்டில் களில் திரவ வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திரவ வடிவில் தங்கம் கடத்தல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, 10 பயணிகளின் உடைமைகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடத்தல்காரர்கள் வழக்கத்திற்கு மாறாக, வாசனை திரவிய பாட்டில்களுக்குள் திரவ வடிவில் 24 காரட் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, சுத்தமான தங்கத்தை ரசாயனங்களுடன் சேர்த்து கரைத்து, தண்ணீர் அல்லது எண்ணெய் போன்ற நீர்ம நிலைக்கு மாற்றி வாசனை திரவிய பாட்டில்களில் ஊற்றி கடத்தி வந்துள்ளனர். சாதாரண ஸ்கேனர் கருவிகளில் சிக்காமல் இருக்கவும், பின்னர் ரசாயன சுத்திகரிப்பு மூலம் மீண்டும் திடமான தங்கமாக பிரித்தெடுக்கும் நோக்கிலும் இவ்வாறு செய்துள்ளனர்.

நாட்டிலேயே இத்தகைய நூதன கடத்தல் முறை பிடிபடுவது இதுவே முதல் முறை என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்

மேலும், அந்தப்பயணிகள் கொண்டு வந்த டிராலி பைகளின் திருகுகள்(ஸ்க்ரூ), கம்பிகள், பைகளின் சக்கரங்கள் மற்றும் காதில் அணியும் 'இயர்பட்ஸ்' கருவிகளுக்கு உள்ளேயும் தங்க துண்டுகள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இவர்களிடமிருந்து மொத்தம் 2.9 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 5 லட்சம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 10 பயணிகளையும் பிடித்து, இந்த நூதன தங்க கடத்தல் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X