சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு


சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு
x
தினத்தந்தி 27 April 2025 1:03 AM IST (Updated: 27 April 2025 1:03 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2011-ம் ஆண்டு சபரிமலை புல் மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டல, மகர விளக்கு சீசன் மட்டுமின்றி மாதம் தோறும் நடைபெறும் பூஜையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள். கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் மட்டும் 54 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். அவ்வாறு சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களில், விபத்துகள் காரணமாக மரணம் அடையும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான பிரீமியம் தொகையினை திருவிதாங்கூர் தேவஸ்தானம் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.

ஆனால் மலை ஏறும் போது ஏற்படும் மாரடைப்பு உள்பட இயற்கை மரணங்களுக்கு எந்த வித நிவாரண உதவிகளும் வழங்கப்படுவது இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு சபரிமலை புல் மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்தனர். அப்போதே இதுபோன்ற சம்பவங்களில் உதவுவதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து பொது நிவாரண நிதியை ஏற்படுத்த கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தி இருந்தது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஐகோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தை வசூல் செய்து பொது நிவாரண நிதி ஏற்படுத்தப்படும். விபத்து அல்லாத மாரடைப்பு உள்பட இயற்கை மரணங்களால் உயிரிழக்கும் அய்யப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அந்த நிதி பயன்படுத்தப்படும். அதாவது, மரணம் அடையும் அய்யப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் வரை நிவாரண உதவி வழங்கப்படும்.

இந்த பொது நிவாரண நிதிக்கு பொதுமக்களும், அய்யப்ப பக்தர்களும் தாராளமாக நன்கொடை வழங்கலாம். மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் அய்யப்ப பக்தர்களும், கட்டாயம் இன்றி ரூ.5 வீதம் நன்கொடை வழங்க அதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவது இல்லை. கடந்த 2 சீசன்களில் மலை ஏறும் போது மாரடைப்பு உள்பட இயற்கை மரணங்கள் மூலம் 93 அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story