மராட்டியம்: போலீசார் நடத்திய சோதனையில் காரில் இருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல்


மராட்டியம்: போலீசார் நடத்திய சோதனையில் காரில் இருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Oct 2024 2:22 PM IST (Updated: 22 Oct 2024 3:35 PM IST)
t-max-icont-min-icon

பணம் மற்றும் பிற தகவல்கள் குறித்து காரில் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனே,

மராட்டிய மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்படுகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள கேத்-சிவாபூர் சுங்கச்சாவடி அருகே புனே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் இருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக புனே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புனே போலீஸ் அதிகாரி கூறுகையில், "மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய சோதனையில் சதாரா நோக்கி சென்ற கார் ஒன்று மறிக்கப்பட்டது. அந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில் 4 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.5 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் பணம் எண்ணப்பட்டு வருகின்றது. பணம் மற்றும் பிற தகவல்கள் குறித்து காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது" என்றார்.

இதற்கிடையில், சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் நேற்று இரவு தனது எக்ஸ் தள பதிவில், சிவசேனாவை சேர்ந்த (முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான) எம்.எல்.ஏ.வின் காரில் இருந்து "ரூ. 15 கோடி" பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story