கருப்பு பண பதுக்கல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் அளித்து ரூ.5 கோடி பரிசு: மத்திய அரசு அறிவிப்பு

கருப்பு பண பதுக்கல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தால் ரூ.5 கோடி பரிசு பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருப்பு பண பதுக்கல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் அளித்து ரூ.5 கோடி பரிசு: மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

வருமான வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடுவோர் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கும் வகையில் திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பண ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக வருமான வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள் குவிப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் பரிசுத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி வரி ஏய்ப்பு, பினாமி சொத்து பரிமாற்றம் மற்றும் கருப்பு பணம் பதுக்குவோர் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிப்போருக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் பரிசுத்தொகையை மாற்றியமைத்து புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. வருமான வரி தகவல் அளிப்போர் பரிசுத்திட்டம் 2018 என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் கீழ் 3 வகையிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி வருமானம் மற்றும் சொத்து (வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் ஏலமிடத்தக்கது) வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். இந்த முறைகேடு குறித்த கணிசமான தகவல்களை வருமான வரித்துறையின் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கைக்கு உதவலாம்.

இதைப்போல பினாமி சொத்துகள் பரிமாற்றங்கள் குறித்து, பினாமி தடுப்பு பிரிவு இணை அல்லது கூடுதல் ஆணையர்களிடம் தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்பு பணம் மற்றும் சொத்துகள் குறித்து கணிசமான தகவல் அளிப்போருக்கு ரூ.5 கோடி வரை பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த தகவல்களை வெளிநாட்டினர் உள்பட யாரும் வழங்கலாம் என்று கூறியுள்ள வருமான வரித்துறை, இவ்வாறு தகவல் அளிப்போரின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com