ரூ.5 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: நைஜீரியாவுக்கு தப்பி ஓடிய குஜராத் தொழில் அதிபர்?

ரூ.5 ஆயிரம் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட குஜராத் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா, நைஜீரியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.5 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: நைஜீரியாவுக்கு தப்பி ஓடிய குஜராத் தொழில் அதிபர்?
Published on

புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று, அவற்றை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற மோசடிக்காரர்களின் வரிசையில் இணைந்த மற்றொரு தொழில் அதிபர்தான் நிதின் சந்தேசரா.

குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வரும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும், பினாமி பெயரில் நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான நிதின் சந்தேசரா, சகோதரர் சேத்தன், அண்ணி தீப்திபென் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியிருக்கும் இவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நிதின் சந்தேசராவை துபாயில் வைத்து கடந்த மாதம் அமீரக அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதில் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் நிதின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் தற்போது நிதின் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நைஜீரியாவில் தலைமறைவாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியா அல்லது வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டு மூலம் நிதின் நைஜீரியாவுக்கு சென்றதற்கான உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தியாநைஜீரியா இடையே பரஸ்பரம் குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் எதுவும் நடைமுறையில் இல்லை. எனவே நிதின் மற்றும் அவரது கூட்டாளிகள் நைஜீரியாவில் தங்கியிருப்பது உண்மை என்றாலும் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது மிகவும் சிரமம் ஆகும்.

இதற்கிடையே நிதின் சந்தேசரா உள்ளிட்டோரை பார்த்தால் கைது செய்து நாடு கடத்துமாறு அமீரகத்துக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச போலீசை நாடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com