டிஜிட்டல் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி மோசடி; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மோசடி செய்யப்பட்ட தொகை சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
டிஜிட்டல் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி மோசடி; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தவறான முறையில் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் ‘டிஜிட்டல் கைது’ என்ற முறையை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றனர்.

அவர்கள் அரசு அதிகாரிகள் போலவும், காவல்துறை அல்லது சி.பி.ஐ. அதிகாரிகள் போலவும் தங்களை காட்டிக் கொண்டு, வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலமாக பொதுமக்களை மிரட்டுகின்றனர். ‘டிஜிட்டல் கைது’ என்ற வார்த்தையைக் கூறி அச்சுறுத்துவதோடு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பெற்று பணம் பறித்து ஏமாற்றுகின்றனர்.

இவ்வாறு பல்வேறு நூதன முறைகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், டிஜிட்டல் குற்றங்கள் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிஜிட்டல் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை ஒரு மாபெரும் கொள்ளை அல்லது திருட்டாக கருத வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், இந்த தொகை இந்தியாவின் சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சில வங்கி அதிகாரிகளின் கூட்டு சதி அல்லது அலட்சியம் காரணமாக இதுபோன்ற குற்றங்கள் நடக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அல்லது மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், டிஜிட்டல் குற்றங்களை திறம்பட கையாள்வது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்குள் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதோடு, டிஜிட்டல் கைது வழக்குகளை விரைந்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள டிஜிட்டல் கைது வழக்குகளின் விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதற்கு சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்குமாறு குஜராத் மற்றும் டெல்லி அரசுகளை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், டிஜிட்டல் கைது வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்புத் துறை மற்றும் பிற நிறுவனங்கள் ஆலோசனை நடத்த வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக புதிய நிலை அறிக்கைகளை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com