

புதுடெல்லி,
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் டெல்லியில் நேற்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் மற்றும் ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து 2 துறைகள் தொடர்பான பணிகளுக்கு நிதிஉதவி உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளித்தார்.
பின்னர் இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
ஊரக வளர்ச்சியை பொறுத்தமட்டில் மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 150 நாட்கள் ஆக உயர்த்த வேண்டும் என்றும், ஊதியத்தை 300 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2021-22-ம் நிதியாண்டில் இதுவரை மத்திய அரசால் ஊதியத்துக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3,524.69 கோடி முழுவதும் 15-9-2021 வரை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தற்போது 22-10-2021 வரை ரூ.984.23 கோடி நிலுவையில் உள்ளது. இந்த ஊதிய நிலுவையை பண்டிகை காலத்தை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்புகளுக்கும் குழாய் இணைப்பு வழங்க இந்த ஆண்டுக்கு ரூ.5,480 கோடிக்கு திட்ட வரைவு தயாரித்து ஜல்சக்தி துறை மந்திரியிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதாக மந்திரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெரிய கருப்பன் கூறினார்.