வழக்கை முடித்து வைக்க ரூ.8 லட்சம் லஞ்சம்... பணம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஜி.எஸ்.டி. அதிகாரி

கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. அதிகாரி மீது பெங்களூரு லோக் ஆயுக்தா பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கை முடித்து வைக்க ரூ.8 லட்சம் லஞ்சம்... பணம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஜி.எஸ்.டி. அதிகாரி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் நகர எல்லைக்குள், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை ‘பெங்களூரு நகர லோக் ஆயுக்தா’ பிரிவு விசாரிக்கிறது. இதில் விசாரணைப் பிரிவு, தொழில்நுட்ப தணிக்கைப் பிரிவு மற்றும் ஊழல் தடுப்புக்கான பிரத்யேக காவல் பிரிவு ஆகியவை செயல்படுகின்றன.

இந்நிலையில், சையத் சமீர் என்ற நபர் பெங்களூரு நகர லோக் ஆயுக்தா பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மத்திய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கை முடித்து வைக்க ரூ.8 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று ஜி.எஸ்.டி. அதிகாரி மோகித் பிரதாப் சிங் கேட்டதாக தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், மோகித் பிரதாப் சிங்கை கையும் களவுமாக பிடிப்பதற்கு பெங்களூரு லோக் ஆயுக்தா பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன்படி லஞ்சப் பணத்தை கொடுக்கும்போது அதனை தனது செல்போனில் சையத் சமீர் ரகசியமாக வீடியோ பதிவு செய்தார்.

அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. அதிகாரி மோகித் பிரதாப் சிங் மீது பெங்களூரு லோக் ஆயுக்தா பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com