முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கேரளாவில் வெள்ளம்: ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்

கேரளாவில் வெள்ளத்தால் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கேரளாவில் வெள்ளம்: ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.இங்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் முகாம்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வீடு, வாசல்களை இழந்த இவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 101 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.

ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தவண்ணம் உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டும் வருகின்றனர். அவர்கள் வளர்த்த கால்நடைகள் உணவு கிடைக்காமல் சுற்றித்திரிகின்றன. மண் சரிவு மற்றும் மழையால் ஆயிரக்கணக்கான வாகனங்களும் சேதம் அடைந்தன. 10 ஆயிரம் கி.மீட்டர் சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்காக உடனடியாக ரூ. 400 கோடி வழங்கவேண்டும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளபாதிப்புகளால் சுமார் 8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 1,200 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com