

புதுச்சேரி,
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ முதுநிலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் நிலுவை ஊதியத்தை உடனடியாக செலுத்த வலியுறுத்தி பணியாளர்கள் அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இரண்டு மாதத்திற்கான ஊதியம் மற்றும் இதர படித்தொகை சேர்த்து சுமார் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் அரசின் கருவூலத்தில் இருந்து சம்பந்தப்பட்ட கல்லூரியின் தனியார் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் வங்கி கணக்கை கல்லூரி நிர்வாகம் சரிபார்த்தபோது அரசு கருவூலத்தில் இருந்து அனுப்பப்பட்ட தொகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தனியார் வங்கியிடம் விசாரித்தனர். அப்போது மருத்துவக் கல்லூரி வங்கி கணக்கை ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள் ரூ.8.5 கோடி பணத்தை சைபர் குற்றவாளிகள் கொள்ளையடித்துள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பணத்தை அபகரித்து இருப்பது தெரிய வந்தது. இந்த ஆன்லைன் மோசடிக்கு தனியார் வங்கி முழு பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.