

புதுடெல்லி,
தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரின் டி.எம்.சி. அளவை குறைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 2வது பட்ஜெட் கூட்டத்தொடரின் 16வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினரும் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சியினரும் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மக்களவை இன்று மதியம் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், அவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து 16வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.