ரூ.2 ஆயிரம் கோடி ‘பிட்காயின்’ மோசடி செய்தவர் கைது

‘பிட்காயின்’ வர்த்தகத்தில், 8 ஆயிரம் பேரிடம், ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவருடைய கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர்.
ரூ.2 ஆயிரம் கோடி ‘பிட்காயின்’ மோசடி செய்தவர் கைது
Published on

புனே,

பிட்காயின் என்பது ஆன்லைன் கரன்சி ஆகும். மெய்நிகர் கரன்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக அதை பரிமாற்றம் செய்து, லாபம் ஈட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். பிட்காயினுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தபோதிலும், அதன் பயன்பாடு நீடித்து வருகிறது.

இதற்கிடையே, பிட்காயின் வர்த்தகத்தை பயன்படுத்தி, இந்தியாவில் முதல்முறையாக மோசடியில் ஈடுபட்டவர், கைது செய்யப்பட்டார். அவர் பெயர் அமித் பரத்வாஜ்.

அவர், 2014-ம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக பிட்காயினுக்கென ஆன்லைன் சந்தையை அறிமுகப்படுத்தினார். தன்னிடம் பிட்காயினை முதலீடு செய்தால், பல மடங்கு லாபத்தை திருப்பி அளிப்பதாக முதலீட்டாளர்களுக்கு ஆசை வார்த்தை காட்டினார்.

18 மாத காலத்தில் முதிர்வடையும் காண்டிராக்டில் சேர்ந்தால், 10 சதவீத லாபம் திரும்பக் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். பிட்காயினை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் தொழில்நுட்பத்தை அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இந்த ஆசைவார்த்தைகளை நம்பி, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அவரிடம் முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி, யாருக்கும் அவர் வருவாயை திருப்பித்தரவில்லை.

முதலீட்டாளர்களின் நெருக்கடி அதிகரித்ததால், அமித் பரத்வாஜ் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்குக்கு தப்பிச் சென்றார். இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வரும் மராட்டிய மாநிலம் புனே நகர போலீசார், அவர் பாங்காக்கில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், அமித் பரத்வாஜ், விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில், அவரை புனே நகர போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடைய கூட்டாளிகள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அமித் பரத்வாஜ், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி உள்ளார். அவர் மோசடி செய்த மொத்த தொகை ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com