

கன்னூர்,
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் உள்ள பய்யனூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ-எம் கட்சியினர்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது அலுவலகம் தீ வைக்கப்பட்டதா? என்பது குறித்து தெரியவில்லை எனவும் தடயவியல் அறிக்கைக்கு பின்னரே எந்த ரீதியிலான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து முழுமையான தகவல் கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது, அலுவலகத்தில் யாரும் இல்லை. இருப்பினும் சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீதான தாக்குதலை கண்டித்து நாளை பய்யனூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிபிஐ-எம் கட்சியினர், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி சிபிஐ-எம் கட்சி நிர்வாகி தன்ராஜ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவு தின அனுசரிப்பு கூட்டம் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி மூலம் கடைபிடிக்கப்பட்டதாகவும் அப்போது, பாஜகவினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் எனவும் பதில் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு இரு தரப்பைச்சேர்ந்தவர்களின் சிலரது வீடுகள் மீது தாக்குதல் நடத்தபட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.