

புதுடெல்லி,
ஆலங்குடி அருகே பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திரிபுராவில் லெனின் சிலையை அகற்ற பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் ஊக்குவித்தது போல், பெரியார் போன்று தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறும் தங்கள் தொண்டர்களுக்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும், தலித்களுக்காக போராடியவருமான பெரியாரின் சிலை இன்று தமிழகத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை சேதம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவ சிலை கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராவணன் தலைமையில் நடந்த இந்த விழாவை தொடர்ந்து திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து அந்த சிலையை பராமரித்து வந்தனர். பெரியார் நினைவு நாள், பிறந்தநாளன்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதிக்கு யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை பகுதி அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. இன்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர். மேலும் அங்கு பதட்டத்தை தவிர்க்கும் வகையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
அரசின் உத்தரவுப்படி உடைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் உடனடியாக சீரமைத்து பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிரடியாக செயல்பட்ட அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னதாக உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் தலையை ஒட்டவைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.