சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21ந் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.

குற்றவியல் (சட்ட திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21ந் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனையும் விதிக்க வகை செய்கிறது.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கான குறைந்தபட்ச சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. இது வாழ்நாள் சிறையாக அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படும்.

இந்த கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும் இந்த சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com