நடிகை ரம்யாவின் உடல் நலம் குறித்த பரபரப்பு

நடிகை ரம்யாவின் உடல்நலம் குறித்து பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ரம்யாவின் உடல் நலம் குறித்த பரபரப்பு
Published on

பெங்களூரு

நடிகை ரம்யா

தமிழில் 'குத்து' 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. பெங்களூருவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியா தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 6 மாதங்கள் எம்.பி.யாக இருந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட ரம்யா தீவிர அரசியலில் இருந்து விலகியே உள்ளார். கர்நாடகத்தில் நடைபெற்ற ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையில் அவர் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.

உடல் நலம் பற்றி வதந்தி

அதன் பிறகு சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர் மீண்டும் கன்னட படங்களில் நடித்தும் வருகிறார்.

அவர் தனது சொந்த விஷயம் காரணமாக ஜெனீவாவுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக தமிழ் இணையதள ஊடகங்களில் திடீரென செய்தி வெளியானது. குறிப்பாக முகநூல்(பேஸ்புக்) மற்றும் வாடஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

நலமுடன் இருப்பதாக தகவல்

அதைத்தொடர்ந்து பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி வெளியிடப்பட்டது. இதனால் திரையுலகினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி கர்நாடகத்தில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதுகுறித்து பெங்களூருவில் உள்ள நடிகை ரம்யாவின் நண்பர்களிடம் விசாரித்ததில், அவர் நலமுடனும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.

நடிகை ரம்யாவின் தயாரிப்பு நிறுவன நிவாகி சுனைனா சுரேஷ் கூறும்போது, 'நடிகை ரம்யா நலமாக உள்ளார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் குறித்த பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்றார்.

பரபரப்பு

ரம்யாவுக்கு எதுவும் ஆகவில்லை என்ற தகவல் வெளியானதும் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் இணையதள ஊடகங்கள் ரம்யா குறித்த செய்தியை நீக்கின. நடிகை ரம்யாவின் உடல் நலம் குறித்த வதந்தியால் கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

தனது உடல்நிலை குறித்து பரவிய வதந்தி பற்றி தனது எக்ஸ்(டுவிட்டர்) தளத்தில் நடிகை ரம்யா வெளியிட்டுள்ள பதிவில், 'நான் உங்களை விரைவில் நம்ம ஊரில் பார்க்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ரம்யாவின் தோழி சித்ரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள பதிவில், 'இரவு உணவுக்காக ஜெனீவாவில் திறமை மிகுந்த நடிகை ரம்யாவை சந்தித்தேன். நாங்கள், பெங்களூரு மீதான எங்களின் நேசம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com