

புதுடெல்லி,
வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பகிரப்படுவது தொடர்பாக, வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப், அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்ஃபோன் செயலியாக உருவெடுத்துள்ளது. பல்வேறு தகவல்களை உடனுக்குடன் பகிர உதவுவதோடு, பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் வாட்ஸ்ஆப் மூலம் பரப்பப்படுகிறது.
இதனை சில ஊடக நிறுவனங்கள், மக்கள் விரோத சக்திகள், அரசியல் இயக்கங்கள் பயன்படுத்தி, பொய்யான செய்திகளை பரப்புகின்றன. அந்த செய்திகளை உண்மை என நம்பி, பொதுமக்களும் மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்வதால், நாடு முழுவதும் நம்பகமற்றதன்மை நிலவி வருகிறது.
இது மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் வாட்ஸ்ஆப் நிறுவனம், வதந்திகள், பொய்ச் செய்திகள் பகிரப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இதுதொடர்பாக, ஏற்கனவே நோட்டீஸ் ஒன்றை மத்திய அரசு அனுப்பியிருந்தது. இந்நிலையில், மீண்டும் தற்போது 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறான மற்றும் வதந்திகளை பரப்பும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் சமூக விரோத குழுக்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் உதவ வேண்டும் என்று மத்திய அரசு அந்த நோட்டீசில் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் "நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள எளிய, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழிக்கான பயன்பாடாக வாட்ஸ் ஆப்-ஐ உருவாக்கியுள்ளோம். மேலும் இதில் புதிய அம்சங்களைச் சேர்க்க பரிசீலித்து வருகிறோம். வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்கும் விதத்தில் வாட்ஸ்ஆப் பயனாளர் ஒரு ஃபார்வர்ட் செய்தியினை இனி 5 நபர்களுக்கு மேல் அனுப்பமுடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதில் இருந்த குயிக் ஃபார்வர்டு பட்டன் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் உங்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு ஆழமாக கடமைப்பட்டுள்ளோம். இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி எங்கள் சேவைத் திறனை மேம்படுத்துவோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் எந்த நாட்டையும் விட அதிக அளவில் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்திய பயனாளர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.