‘கடந்த 12 ஆண்டுகளில் கிராமங்களின் உள்கட்டமைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது’ - பிரதமர் மோடி

வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக இல்லாமல் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்காக உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
‘கடந்த 12 ஆண்டுகளில் கிராமங்களின் உள்கட்டமைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது’ - பிரதமர் மோடி
Published on: 

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை போற்றும் விதமாக, 'சேவா யாத்ரா' என்ற பெயரில் குஜராத் மாநிலம் வாத்நகரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படுகிறது. அதே போல், மறுமார்க்கத்தில் வாரணாசியில் இருந்து வாத்நகருக்கு மற்றொரு இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படுகிறது.

இந்த இரண்டு பேரணிகளும் கடந்த செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய நிலையில், அக்டோபர் 7-ந்தேதி நிறைவடைய உள்ளன. வாத்நகர் என்பது பிரதமர் மோடி பிறந்த இடமாகும். அதே போல் வாரணாசி தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி எம்.பி. ஆக பதவி வகித்து வருகிறார். இதனை சிறப்பிக்கும் விதமாகவே இரு நகரங்களுக்கும் இடையில் வாகனப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. இந்த பேரணிகள் நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக செல்கின்றன.

இந்நிலையில், இருசக்கர வாகனப் பேரணியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது;-

“கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாக குறைந்துள்ளது. இன்று, கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்பட்டுள்ளன.

வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமல்லாமல், சமூகத்தில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் ஆக்கபூர்வமான மாற்றங்களுக்காகவும் ஒருவர் உழைக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com