ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி,

ரஷ்ய நாட்டின் வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ். இவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். 2 நாட்கள் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதில், இரு நாட்டு வெளிவிவகார அமைப்புகளின் தலைவர்களும், இருதரப்பு உறவுகளின் நடப்பு நிலை பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற உள்ள உயர்மட்ட அளவிலான கூட்டத்திற்கு தயாராவது பற்றியும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவையும் ஆலோசனையில் இடம்பெறும்.

இதேபோன்று, பரஸ்பர விருப்பங்களுடன் கூடிய மண்டல மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்படும். ஐ.நா., பிரிக்ஸ் உள்பட சர்வதேச அரங்கில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறைகளை பற்றி ஆய்வு செய்யப்படும் என மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நாட்டுக்கு லாவ்ரோவ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் பேச்சுவார்த்தை, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் தொழில் நுட்ப உறவுகள், அறிவியல், கலாசாரம் மற்றும் மனிதநேய அடிப்படையிலான தொடர்புகள் ஆகியவற்றை இரு நாடுகளும் வளர்த்து வருகின்றன என இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com