

புதுடெல்லி
இந்தியாவின் புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெறுவார்கள். இந்த நிலையில், இந்த உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க உள்ளார்.
இதனை ரஷியாவின் கிரெம்ளின் மாளிகையிலுள்ள அதிபரின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவியாளர் யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
அப்போது இரு நாடுகளின் தலைவர்கள் உலகளாவிய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பன்முக தன்மை கொண்ட உலகளாவிய நிலைமை ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜின்பிங்குடனும் இருதரப்பு கூட்டம் ஒன்றை நடத்த புதின் திட்டமிட்டு உள்ளார். இந்தியா-ரஷியா இடையேயான 23-வது வருடாந்திர உச்சி மாநாடு, 2025-ம் ஆண்டு டிசம்பரில் நடந்தது. அதில் புதின் கலந்து கொண்டார்.
அப்போது, பல்வேறு முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடியுடன் அவர் விரிவான அளவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பிரிக்ஸ் குழுவானது உலக அளவில் செல்வாக்கு பெற்று இருக்கிறது. இந்த உறுப்பு நாடுகள், உலக மக்கள் தொகையில் 49.5 சதவீதமும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் 26 சதவீதமும் பிரதிபலிக்கின்றன.