இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனை உற்பத்தி தொடங்கியது; 85 கோடி ‘டோஸ்’ தயாரிக்க திட்டம்

இந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் சோதனை உற்பத்தி தொடங்கி உள்ளது. 85 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனை உற்பத்தி தொடங்கியது; 85 கோடி ‘டோஸ்’ தயாரிக்க திட்டம்
Published on

ரஷிய தடுப்பூசி

கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கியது. இந்த தடுப்பூசியை முதல் கட்டமாக ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் இறக்குமதி செய்து இந்தியாவில் வினியோகிக்கிறது. இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன. அதில் டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள மோர்பென் லேபரட்டரிசும் ஒன்று. இந்த நிறுவனம், இதற்காக கடந்த ஜூன் மாதம், ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

உற்பத்தி தொடங்கியது

இந்த மோர்பென் லேபரட்டரிஸ் நிறுவனம், இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் தடுப்பூசி உற்பத்தியை சோதனை ரீதியில் தொடங்கி உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி தொடங்கி உள்ளது. இந்த முதல் தொகுதி தடுப்பூசிகளை தரக்கட்டுப்பாட்டுக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய கமலேயா சென்டருக்கு அனுப்பி வைப்போம் என கூறப்பட்டுள்ளது. இதையொட்டி ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் திமிட்ரிவ் கூறுகையில், மோர்பென் லேபரட்டரிசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், அதிகளவு தடுப்பூசியை கிடைக்கச்செய்யும். உலகின் மிகச்சிறந்த தடுப்பூசி மூலம் இந்தியாவும், எங்களது உலகளாவிய கூட்டாளிகளும் தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துவார்கள் என குறிப்பிட்டார்.

85 கோடி டோஸ் உற்பத்தி

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பதற்கு கிளாண்ட் பார்மா, ஹெட்டெரோ பயோபார்மா, பேனாசியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோபார்மா, விர்ச்சோ பயோடெக் ஆகிய மருந்து நிறுவனங்கள் ரஷிய நேரடி முதவீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்தியாவில் ஆண்டுக்கு 85 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்க இந்த ஒப்பந்தங்கள் வழிவகை செய்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com