சபரிமலை விவகாரம்: ஜனாதிபதியுடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு - கேரள அரசு மீது புகார்

சபரிமலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர்கள் கேரள அரசு மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
சபரிமலை விவகாரம்: ஜனாதிபதியுடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு - கேரள அரசு மீது புகார்
Published on

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களையும் மீறி 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

இதை கண்டித்து மாநிலத்தில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சபரிமலையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் மாநில அரசு அழித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், வழக்கமான பஜனை பாடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், சபரிமலையை நிர்வகிக்கும் வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை விசாரித்து முடிக்கும்வரை கேரள அரசு காத்து இருந்திருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மிகுந்த அவசரம் காட்டுகிறது.

இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தவும், அவர்களது மத நிறுவனங்களை அழித்து, அவர்களது உணர்வுகளை புண்படுத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததையே காட்டுகிறது. அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு குறிவைத்து இருக்கிறது.

பிற மதத்தை சேர்ந்த பெண்கள் நுழைவதற்கு உதவுவதன் மூலம் சபரிமலையின் புனிதத்தை கெடுப்பதில் அரசும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர். போலீசார் கூட, பெண்களுக்கு தங்கள் சீருடைகளை அணிவித்து சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். இது இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும்.

இவ்வாறு அந்த மனுவில் பா.ஜனதாவினர் குறிப்பிட்டு இருந்தனர்.

ஜனாதிபதியை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான சரோஜ் பாண்டே, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள் இடம்பெற்று இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com