சபரிமலை விவகாரம்: சமூக வலைத்தளம் மூலம் போராட்டத்தை தூண்டிய 40 பேர் மீது வழக்கு - 1000 ‘பேஸ்புக்’ கணக்குகள் கண்காணிப்பு

சபரிமலை விவகாரத்தில், சமூக வலைத்தளம் மூலம் போராட்டத்தை தூண்டிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 1000 பேஸ்புக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை விவகாரம்: சமூக வலைத்தளம் மூலம் போராட்டத்தை தூண்டிய 40 பேர் மீது வழக்கு - 1000 ‘பேஸ்புக்’ கணக்குகள் கண்காணிப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் போராட்டத்தை தூண்டிய 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1000-க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலையில் தற்போது மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு போராட்டங்களை தடுப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

இது ஒருபுறம் இருக்க சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பலர் அவதூறு பரப்பி வருகின்றனர். குறிப்பாக அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் இந்த போராட்டத்தை சிலர் தூண்டி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு சமூக வலைத்தளங்களை ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மாநில சைபர் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அதன்படி சமூக வலைத்தளம் மூலம் போராட்டத்தை தூண்டிய சுமார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் சபரிமலை விவகாரத்தில் போராட்டத்தை தூண்டும் விதமாக தகவல்களை பதிவிட்டு வரும் 1000-க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த கணக்குகளை தொடர்ந்து கண்காணித்து வரும் போலீசார், அத்தகைய கணக்குகளின் உரிமையாளர்களை கைது செய்யும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

இதைப்போல போலி பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்போரின் இருப்பிடத்தை கண்டறிய பேஸ்புக் நிறுவனத்தின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com