சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு

சபரிமலை விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கோரி சுப்ரீம்கோர்ட்டை நாட தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு
Published on

பம்பை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 17ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 1050 வயதுக்கு உட்பட்ட பெண்களை அய்யப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அப்போது கடும் மோதலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு நடையை திறந்தார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று கோஷங்களை எழுப்பினர். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு கோவில் நடை திறக்கப்படுவது இது 3வது முறையாகும்.

அத்தாழ பூஜை முடிகிற அடுத்த மாதம் 27ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பிறகு நடை மூடப்படும். பின்னர் மகர விளக்கிற்காக டிசம்பர் 30ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14ந் தேதி மகர விளக்கு பூஜைக்கு பின்பு ஜனவரி 20ந் தேதி கோவில் நடை மூடப்படும்.

இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரும் திங்கள் கிழமை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com